பதிவு செய்த நாள்
12
ஜன
2017
12:01
மதுரை: திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநகர் கோயிலில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன.,2ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் கோயில் திருவாட்சி மண்டபத்தை மாணிக்கவாசகர் வலம் சென்றார். நேற்றுமுன்தினம் ராட்டின திருவிழா நடந்தது.நேற்று அதிகாலை மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம் முடிந்து தைல காப்பு சாத்துப்படியானது. உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து காப்பு கட்டப்பட்டு, நடராஜர் சிம்மாசனத்திலும், அம்பாள் வெள்ளி அம்பாரியிலும் தனித்தனி பூ சப்பரத்தில் கிரிவலம் சென்று அருள் பாலித்தனர்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நடராஜர், அம்பாள், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது மகாலட்சுமி நெசவாளர் காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் அபிஷேகம் முடிந்து ஆண்டாள் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது.
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடந்தது. நேற்று அம்மன், சுவாமிக்கு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு திருவாதிரை களி வழங்கப்பட்டது. அம்மன், சுவாமி ரதவீதியில் எழுந்தருளினர். பிரளயநாதர்சுவாமி கோயில், பேட்டை அருணாசலஈஸ்வரர் கோயில், முள்ளிப்பள்ளம் காசிவிஸ்வநாதர்சுவாமி கோயில், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.