திருவரங்கம் நம்பெருமாள் தினமும் காலை பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அப்போது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகியவற்றைப் பாடுவார்கள். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக்கப்பட்டது இந்த அங்கி.