பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
வேதங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஏற்றல் வைசேஷிக, நியாய சாத்திரங்களின் கொள்கை. ஆனால் வேதங்களை முழுமுதற் பிரமாணமாக ஏற்றுக் கொண்டு, கடவுளை விடவும் மதிப்பளிப்பதால், மீமாம்சை தரிசனம் தனியிடம் வகிக்கின்றது.
ஆராய்ச்சி: மீமாம்சை என்றால் விசாரித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பது பொருள். ஆயினும் இதற்கு மாறாக வேதங்களை ஆராய்ச்சி செய்வதை விடுத்து அதன் கருத்துக்களுக்கு ஏற்ற சரியான விளக்கங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே மீமாம்சையின் கருத்து. சொல்லும் அதன் பொருளும் பிரிக்க முடியாதவை எனும் தத்துவக் கொள்கையை எடுத்துக்கொண்டு வேதங்களின் சொற்களை ஆராய்ச்சி செய்யப் புறப்பட்ட மீமாம்சகர்கள் வேத வசனங்களுக்குப் பொருள் கண்டதோடு அல்லாமல், மொழி ஆராய்ச்சியின் அடி ஆழம் வரை சென்றனர்.
சொல் ஆராய்ச்சி: சொல், எழுத்து- ஒலி - ஒலி எழுப்புவோன் என்று வகைப்படுகின்றது. ஒலி ஒன்றே நித்தியமானது. எனவே அது கூறுபவனைச் சார்ந்து இயங்கவில்லை. அ என்னும் ஒலியைப் பத்துமுறை ஒருவன் கூறினாலும், பத்து பேர் ஒரு முறை கூறினாலும் அ-வில் மாற்றம் ஏற்படுவதில்லை. ஒலி என்பது நித்தியமானது. ஆகவே வேதங்கள் நித்தியமானவை. வேதங்கள் மனிதனால் இயற்றப்படாதவை. ஆகவே அது அபௌருஷேயம் என்று அழைக்கப்பட்டது. ஆனாலும் அவை இறைவனாலும் ஆக்கப்படவில்லை.
பூர்வ மீமாம்சை: வேதத்தின் முதற்பகுதியாகிய பிராம்மணங்களை அடிப்படையாகக் கொண்டது பூர்வ மீமாம்சை எனவும், உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டது உத்தர மீமாம்சை எனவும் வழங்கப்பட்டன. நாளடைவில் பூர்வ மீமாம்சை, மீமாம்சை எனவும், உத்தர மீமாம்சை வேதாந்தம் எனவும் வழக்கில் மாறி அமைந்தன.
கர்ம மார்க்கம்: மீமாம்சகர்கள், நல்லது கிடைக்கவும் தீயவை விலகவும் யாக, யக்ஞம் போன்ற கிரியைகளைச் செய்தனர். சுவர்க்கம் வேண்டி ஆரம்பித்த கிரியைகள் நாளடைவில் முக்தி பெறும் லட்சியமாக உருவெடுத்தன.
நூல்கள்: கல்ப சூத்திரம் என்னும் நூலே மீமாம்சைத் தத்துவத்தின் அடிப்படை. அதன் பின் மீமாம்ச சூத்திரமும் எழுந்தது. மீமாம்ச சூத்திரத்திற்கு பாஷ்யம் (விளக்க உரை) செய்தவர் சபர முனிவர். அந்த நூலுக்கு வழி நூல் செய்தவர் குமரிலபட்டர். குமரிலருக்கும், அவருடைய சீடராகிய பிரபாகரருக்கு ஏற்பட்ட தத்துவ வேறுபாட்டில் இருவரும் இரு வேறு மதங்களை ஸ்தாபித்தனர்.
தத்துவங்கள்: மீமாம்சையில் உயிர்கள் பல, மூலப்பொருட்களும் பல, உலகம் மாயை அல்ல, அது மனதின் கற்பனையும் அல்ல என்பது முதன்மைவாதம்.
ஆன்மா: இது என்றும் உள்ளது. எங்கும் நிறைந்தது. மனதினால் நேராக அறியக்கூடியது.
குணம்- குணி (அறிவு அறிபவன்): அறிபவன். ஆன்மாவுக்கு அறிவு ஒரு குணமல்ல; ஒரு தொழில். அது அறிபவனையும் அறியப்படும் பொருளையும் ஒரு சேர தொழிற்படுத்துகிறது.
கடவுள்: இவர்கள் கடவுள் இல்லை என்று வாதிடவில்லை. ஆயினும் கடவுளின் இருப்பைப் பற்றிப் பேசுவதும் இல்லை. கடவுளை அதிகம் மதியாமைக்குக் காரணம், அவர்கள் வேதங்களைக் கடவுளுக்கும் மேலான, தலை சிறந்த இடத்தில் வைத்துப் போற்றியமையே காரணமாகும்.
கர்ம வாதம்: செயல்களால் வந்த வினைப்பயன் மிகுந்த வல்லமை உடையது. இறைவன் என்னும் கருத்து இல்லாததால் மீமாம்சகர்கள் தங்களுடைய கர்மவினைக்கு அஞ்சி ஒழுக்கத்திலும், தவத்திலும், சீலத்திலும் சிறந்து இருந்தனர்.
யாகங்களை ஏற்றுப் பலன் தரும் சிறு தெய்வங்கள் பல இருப்பதை இவர்கள் ஏற்றாலும், முழு முதற் பரம்பொருளாக ஒன்றை இவர்கள் ஏற்கவில்லை. வேதங்களும், யாக யக்ஞமுமே அவர்களுக்குத் தலையானதாக இருந்தது.
தத்துவ முடிவு: இந்த ஆன்மா உலகம், உடல், பொருள், ஆசை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு பந்தப்படுகிறது. இந்தத் தொடர்பு அவசியமற்றது என்பதை அறிந்து அதிலிருந்து விடுபடுவதே முக்தி என்பது இந்த தரிசனத்தின் முடிவு. முக்தியை வேண்டுபவன் செயல்களிலிருந்து விடுபட்டு, புண்ணிய பாவ பந்தத்தை விடவேண்டும். ஆனாலும் புதுவினைகள் தொடாதிருக்க நித்தியமான வேதகர்மங்கள் செய்யப்படவேண்டும்.