பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
மகாபாரதத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் பெண் கதாபாத்திரங்களுக்கும் உண்டு! இதற்கு காந்தாரி, குந்தி, திரௌபதி, தேவயானை, சர்மிஷ்டை... மாதவி எனப் பலரை உதாரணமாகக் கூறலாம்! தங்களுடைய பெண்ணுக்காக அப்பாக்கள் எந்தத் தியாகத்தையும் செய்ய முன்வருவர் எனக் கூறப்படுவது உண்டு! அது உண்மை என நிரூபிக்க விஸ்வாமித்ரர் முதல் சாதாரண அப்பா வரை பலரை உதாரணம் காட்டலாம்! ஆனால் அபூர்வமாக சில அப்பாக்கள், தங்கள் சுயநலத்திற்காக பெண்களை பலிக் கடா ஆக்குவதும் உண்டு. இதனால் சில பெண்கள் வாழ்க்கையையே வெறுத்து ஞானிகளாகவும் உயர்ந்ததுண்டு! மகாபாரதத்தின் மூதாதையர் எனக் குறிப்பிடத்தக்க தகுதி பெற்றவன் யயாதி! அவனுடைய வழி வந்தவர்கள் தான் பஞ்சபாண்டவர்களும், கவுரவர்களும்!
யார் இந்த யாதி? தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் கணவன். இருவர் மூலமும்; யயாதிக்குக் குழந்தைகள் உண்டு. இவர்களில் தேவயானியின் குழந்தைகளில் ஒருத்திதான் மாதவி! அவளுடைய வாழ்க்கை... பலரால் உதைக்கப்பட்ட பந்துக்குச் சமம்! யயாதி செல்வத்திற்கும் துணிவுக்கும் பெயர் பெற்றவன்! தன் செல்வத்தை, வந்து யாசித்தவர்களுக்கு வாரி வாரி வழங்குபவன். அவனுடைய குழந்தைகளில் ஒருத்தியான மாதவி... நல்ல அழகி. அவள் தன்னைப் போன்றே, தனக்கு வர இருக்கும் கணவனும் அழகுமிக்கவனாகவும் வலிமைமிக்கவனாகவும் இருக்க வேண்டும் என விரும்பியதில் எந்தத் தவறும் இல்லை! ஆனால் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு இடி இறங்கும் என அவள் நினைத்திருக்கவே மாட்டாள். ஒரு நாள்... தந்தையும் மன்னனுமாகிய யயாதி அவளை அழைத்தான்... ஆசையாகச் சென்றவளுக்கு அதிர்ச்சி... யயாதி மாதவியைத் தவிர அங்கு முனிவன் கலாப் நின்றிருந்தான்! உன்னை இந்த கலாப்புடன் அனுப்பிவைக்கிறேன்! சென்று வா எனக் கூறியதுடன், முனிவன் கலாப்பிடம், இவளை அழைத்துச் செல் எனவும் கூறினான்...!
இளவரசனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு முனிவன் பரிசா... அதுவும் திருமணம் என்ற பந்தத்தை உருவாக்காமலே அனுப்பி வைக்கிறான்! மாதவிக்கு அழுகையாய் வந்தது. இதுநாள் வரை அவள் மறந்தும், தந்தையை புண்படுத்தியதில்லை! எடுத்தெறிந்து பேசியதில்லை...! இத்தகைய சூழலில் தனக்கு இப்படியொரு தண்டனையா? - என மாதவி யோசிக்கும் போதே. முனிவன் கலாப் கிளம்பிவிட்டான்... அவன் நடையில் ஓட்டம் இருந்தது... அப்பா சொன்னதைத் தட்டாமல் செய்ய வேண்டுமென்றால், மறுபேச்சு பேசாமல் அவனைப் பின் தொடர வேண்டும்... அதுதான் சரி... என முடிவெடுத்த மாதவி... விடுவிடுவென கலாப்பை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். பழக்கமில்லாத காட்டில் நடந்தவளை முட்கள் குத்தின... ரத்தம் வந்தது. அவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டு, கலாப்பை பார்த்தபோது அவன் தூரச் சென்று கொண்டிருந்தான்...! வேகமாக நடை போட்டாள்! என்ன மனுஷன் இவன்! என் அழகைப் பார்த்து இரங்கவில்லை. என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நடக்கிறானே... இவனிடம் எதை ரசித்து நான் வாழ்வது...? -நீண்ட நேரம் நடந்த பின், ஒரு பெரிய ஏரி வந்தது அவன் அங்கு இருந்த ஒரு மேட்டில் அமர்ந்தான்... மாதவி அருகில் சென்றதும் அவளையும் அமரச் செய்தான்.
முனிவன் கலாப், தான் ஏன் மாதவியை அழைத்து வந்தேன் என்பதை சுருக்கமாகக் கூறி ஆரம்பித்தான். என்னுடைய குரு விசுவாமித்ரர்! குரு தட்சணையாக, தனக்கு எண்ணூறு குதிரைகள் தரவேண்டும் என என்னிடம் கேட்டார்! அவற்றை வாங்க எனக்கு நிறைய பணம் வேண்டும்! அது என்னிடம் இல்லை! உன் தந்தையின் செல்வம்.... வள்ளல் தன்மை பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்! அவரிடம் பணம் பெற்று, குதிரைகளை வாங்கி குருவிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தேன். பணம் பெற உன் தந்தையிடம் வந்தேன்! உன் தந்தையோ அப்போதுதான் ஒரு மிகப் பெரிய யாகத்தை செய்து முடித்திருந்தார். அதில் கலந்து கொண்டவர்களுக்கு தன் செல்வங்களை வாரி வழங்கி விட்டார். அதனால் நான் வந்து கேட்டபோது, அவரால் தர இயலவில்லை. அதே சமயம் செல்வமும், வள்ளல் தன்மையும் கொண்ட யயாதி, இல்லை எனக் கூறாமல் பணத்திற்கு பதில் உன்னை என்னுடன் அனுப்பி விட்டான். இனி நான் உன்னை, மன்னர்களிடம், விற்று குதிரை வாங்கி, குருதட்சனையை நிறைவு செய்ய வேண்டும் என முடித்தான்!
மாதவிக்கு நெஞ்சுக் குழியில் கனத்தது! பணத்திற்கு பதில், தந்தை என்னை இவனிடம் கொடுத்து விற்கச் சொல்லி விட்டாரா? நான் என்ன பண்ட மாற்றுப் பொருளா? என் மனம் என் தந்தைக்கு ஒரு பொருட்டு இல்லையா? தன்னுடைய புகழ் கெடக் கூடாது என்பதற்காக பெற்ற மகளையே யாராவது இப்படி தூக்கிக் கொடுப்பார்களா? இதற்காகவா நான் என் தாய் வயிற்றில் பிறந்தேன்... என நினைத்துக் கண்ணீர் சிந்தினாள்! ஒரு விதத்தில் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது! நிச்சயம்... காடு... தனிமை.... ஆஸ்ரம வாழ்க்கை இல்லை! ஆக ஒரு மன்னனிடம்; அரண்மனையில் நான் காலம் தள்ள வேண்டும். தலைவிதியை நொந்து பலனில்லை! மாறாக வருவதை எதிர்கொள்வோம்...! என மாதவி யோசித்தபோது, மீண்டும் கலாப் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான்! உண்மையில் அவன், மாதவியை லட்சியமே செய்யவில்லை! ஏன்... அவள் அழகு... உடல் என எதுவுமே அவனுக்குத் தேவையில்லை பண்டமாற்றைத் தவிர வேற எதையுமே அவன் சிந்திக்க வில்லை. கலாப் முதலில் ஹர்ஷாஷ்வா என்ற மன்னனிடம் அழைத்துச் சென்றான்... மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லை... மாதவி மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்து பதிலுக்கு கலாப்புக்கு இருநூறு குதிரைகளைக் கொடுத்தான். நான் மீண்டும் வருகிறேன் எனக் கூறி கலாப் விடைபெற்றான்.
ஹர்ஷாஷ்வாவின் அந்தப்புரத்தில் மாதவியும் இடம் பெற்றாள். அனைத்து சவுகர்யங்களும், சுகங்களும் அவளுக்கு மீண்டன! அத்துடன் சீக்கிரமே கர்ப்பம் அடைந்தாள். மிகச் சிறந்த உபசரிப்புடன் பத்தாவது மாதம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்! மன்னரிடம் ஜோதிடர், உலகம் மெச்ச, குழந்தை ஆளுவான் எனக்கூற, அவனுக்கு சுமனா என பெயரிடப்பட்டது - விவரம் அறிந்து கலாப் வந்தான்... மாதவியும் அவனுடன் புறப்பட்டாள்... அடுத்து, திபோதாஸ் என்ற காசி மன்னனிடம் கலாப் அழைத்துச் சென்றான். அவனுக்கு ஆள ஒரு ஆண் வாரிசு தேவைப்பட்டது! அதற்கு அவன் உதவ வேண்டும். பதிலுக்கு கலாப்புக்கு இருநூறு குதிரைகளை வழங்கினான். மன்னனை மகிழ்விப்பதே அவள் நினைவாகி பத்தாவது மாதம் இங்கும் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது! இந்தக் குழந்தையின் பெயர். பிராதர்தன்... மீண்டும் கலாப் வந்தான்... அடுத்த மன்னனை நோக்கிப் புறப்பட்டார்கள். மூன்றாவது போஜ நாட்டு மன்னனான உசினூர். இவனுக்கும் ஆண் வாரிசு தேவை...! ஒப்பந்தப்படி, கலாப், மூன்றாவது தடைவயாக இருநூறு குதிரைகளைப் பெற்றான்.
நான்தான் குழந்தை பெறும் இயந்திரமாக மாறியிருந்தேனே... அதனால் இந்த மன்னனுக்கும் என்னால், ஒரு ஆண் வாரிசு பெற்றுத் தரப்பட்டது என மனதிற்குள் புலம்பினாள் மாதவி!
குழந்தையின் பெயர் சிபி.
மீண்டும் கலாப் வந்தான்.
பின் தொடர்ந்தாள் மாதவி!
ஆனால் அதற்குப் பின் கலாப்புக்கு குதிரைகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
இதனால் மாதவியை அழைத்துக் கொண்டு நேராக விஸ்வாமித்ரரிடம் சென்றான், கலாப்!
என்னால் மீதி குதிரைகளை, தங்களுக்கு குருதட்சனையாகத் தர இயலவில்லை என அவன் கூற,
அதற்கு விஸ்வாமித்திரர்,
நீ மன்னர்களிடம் சென்றதைவிட, நேராக, இவளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்திருக்க வேண்டும் என்றார்.
ஏன் குருவே?
எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அவன் உலகையே ஆள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு என்பது உனக்கு தெரியாததா?
மன்னிக்க வேண்டும். இப்போதும் மீதி இருநூறு குதிரைகளுக்கு பதில் இவளைத் தாங்கள் ஏற்று, மகன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அப்படியே செய்கிறேன். இவள் மூலம் எனக்கு வாரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அது நிறைவேறியதும், நீ வந்து இவளை அழைத்துச் செல்லலாம் எனக் குரு கூற,
அப்படியே எனக் கூறி கலாப், மாதவியை, விஸ்வாமித்ரரிடம் விட்டு விட்டுப் புறப்பட்டான்...!
இப்போது மாதவிக்கு நிஜமாகவே ஆஸ்ரம வாழ்க்கை...
விஸ்வாமித்ரரின் மறுபக்கம் இனிமையாய் இருக்க... பத்தாவது மாதத்தில், நான்காவது குழந்தையைப் பெற்றுத் தந்தாள் மாதவி. அந்த மகனின் பெயர் ஆஸ்தக் செய்தி அறிந்து கலாப் மீண்டும் வந்தான்...! அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்! மாதவி பின் தொடர்ந்தாள்...! இனி என்ன? என மாதவி யோசிக்கத் தொடங்கி அலுத்தபோது, அவன் மீண்டும் யயாதி மன்னனிடம் சென்று, மாதவியை ஒப்படைத்தான்! நன்றி மாதவி எனக் கூறி மறுநிமிடம் கலாப் புறப்பட்டு விட்டான். என்ன மனிதர் இவர்? என கலாப்பை பார்த்துத் திகைத்து நின்றாள் மாதவி! இந்த முறை மன்னன் யயாதி, மாதவியின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். எனக்கு திருமணமே வேண்டாம். இனி நான் அதனை செய்து கொள்வதாக இல்லை என்றாள் மாதவி.
பிறகு என்ன செய்யப் போகிறாய்...?
என் உடல் இச்சைகளைத் துறந்து கங்கையும், யமுனையும் சந்திக்கும் இடத்தில் அமர்ந்து ஆத்மஞானியாக மாறி சொர்க்கம் செல்ல முயற்சிப்பேன் என்றாள் மாதவி!
அப்படியா சரி என சுயம்வரம், திருமண விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான் யயாதி!
வருடங்கள் ஓடின... மாதவி...சங்கம இடத்தில் ஆத்மஞான துறவறத்தில் ஈடுபட்டாள்... யயாதி... தன் காலம் முடிந்து இறந்து சொர்க்கத்தை அடைந்தான்... அங்கு அவனுக்கு மகா மன்னர்கள் இருந்த பகுதியில் இடம் கிடைத்தது. இதனால் கர்வம் கொண்ட யயாதி மமதையில் மற்ற மன்னர்களை இகழ்ந்து சங்கடப்படுத்தினான்! பலன்... அவனுடைய நற்பலன்கள் வெகுவேகமாகக் கரைந்தன...! ஒரு கட்டத்தில் யயாதியின் பூலோகப் பயணம் மீண்டும் துவங்கியது. இதனைத் தன் சக்தியால் உணர்ந்தாள் மாதவி... உடனே தன்னுடைய நான்கு மகன்களுக்கும் தகவல் அனுப்பி, உங்களின் நற்பலன்களில் ஒரு பகுதியை, தாத்தா, யயாதிக்குத் தருவதாக பிரார்த்திக்க வேண்டும் எனக் கோரினாள்! மகன்களும் உடனே அதனை ஏற்று தாத்தாவுக்காக, நற்பலன்களை விட்டுக் கொடுத்தனர். அதே சமயம் மாதவியும், தவத்தின் மூலம் அதுநாள் வரை தான் அடைந்திருந்த நற்பலன்கள் அனைத்தையும் தன் தந்தை யயாதிக்குத் தருவதாகப் பிரார்த்தித்தாள்.
இந்த நற்பலன்கள், யயாதியைச் சென்றடைந்து, அவனை மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்த்தி அங்கேயே நிலையாக நிற்க வைத்து விட்டது!
தாத்தாவுக்குப் பேரன்கள் செய்த நற்கடமையும், மகளாக, தான் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்ததும் மாதவிக்கு மனநிறைவைத் தந்தன...
அப்பா யயாதி... சொர்க்கத்தில் இருந்தபடி, என் செயலையும், என்மகன்களின் நற்செயல்களையும் நினைத்துப் பார்ப்பாரா!
அல்லது பணத்திற்கு பதிலாக, என்னையே தூக்கிக் கொடுப்பது போல இப்போதும் கண்டும் காணாதவராய் நடந்து கொள்வாரா? என மாதவி சிந்தித்தாள்!
ஆனால் அவளுடைய வைராக்கிய மனம் இந்த எதிர்ப்பார்ப்புகளை, நீ தந்தையிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டதை மறந்து விட்டாயா? என இடித்துரைத்தது!
அதே சமயம் அவள், மனம்.
இப்பவும் என்னை மாதிரி அப்பாவால் வாழ்க்கையையே இழந்த துரதிர்ஷ்ட பெண்கள், பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பார்களா? என நினைத்ததை ஒதுக்க இயலவில்லை.