ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி திரிகுணாதீதானந்தர் எதையும் பகுத்து ஆராயும் மனம் படைத்தவர். யாராவது, அற்புதம் பாருங்கள்! அதிசயம் பாருங்கள்! என்று மாயாஜால, மந்திரஜாலக் கதை சொன்னால் அப்படியே நம்பிவிட மாட்டார். உண்மையில் விஷயம் என்ன என்பதை புத்திக்கூர்மையுடன் கவனிக்கத் தொடங்கிவிடுவார். ஒருமுறை அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது பாறை ஒன்றிலிருந்து நீர்ச்சுனை ஒன்று பொங்கி வழிந்து கொண்டிருந்தது. இயற்கைக்கு மாறான நிகழ்ச்சி இது. அந்தப் பகுதியில் வசித்த முஸ்லீம் துறவி ஒருவர், தாம் ஆணையிட்டால் மட்டுமே அப்பாறையிலிருந்து நீர் ஊற்றெடுக்கும் என்று கூறி, வருவோர் போவோரிடம் பணம் வசூல் செய்து அதில் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த அதிசயமான நிகழ்ச்சியைக் காண வந்த மக்களும் அவர் கேட்ட பணத்தை எந்த மறுப்பும் சொல்லாமல் கொடுத்துவிட்டுச் சென்றனர். இதை சுவாமிகளும் பார்த்தார். ஆனால் அவருக்கு என்னவோ அந்தத் துறவியின் வார்த்தையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
மக்கள் அனைவரும் சென்ற பிறகு சுவாமிகள் பாறை மீது ஏறினார். இயற்கைக்கு மாறான அந்த நிகழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அறியும் ஆவலுடன் பார்வையை சுழலவிட்டார். கடைசியில் அதைக் கண்டறிந்துவிட்டார். விஷயம் என்னவென்றால் அந்தப் பாறைக்கு மிகச் சமீபத்தில் நிர்ச் சுனை ஒன்று அமைந்திருந்தது. அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர் வெளியே பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது. ஆனால் கீழிருந்து பார்ப்பவர்களுக்கு அந்தச் சுனை தெரியாது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த முஸ்லீம் துறவி பாறையிலிருந்து நீர் வருவதாகச் சொல்லி, வித்தை காட்டிப் பிழைத்து வந்தார். இதை அறிந்த பிறகு தான் சுவாமிகளுக்கு நிம்மதி வந்தது. இயற்கைக்கு மாறான நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்று யாராவது கூறினால், அதைத் தீர விசாரிக்க அவர் எப்போதும் தயங்கியதில்லை.