பதிவு செய்த நாள்
20
அக்
2011
10:10
கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் 26ந்தேதி துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தன் சூரனை வரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் 31ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல், பக்தர்களின் மனதில் இடம் பெற்ற முருகத்தலம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலாகும். இக்குடவரைக் கோயிலில் கருவறையை சுற்றி வர வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வரவேண்டிய சிறப்பு கொண்டதாகும். மேலும் கருவறையான குடவரையில் வள்ளி தெய்வயானை பிராட்டியர்கள் நின்று வணங்க, கழுகாசலமூர்த்தி ஒருகரமும், அறுகரமும் கொண்டு, வேறெங்கும் இல்லாத சிறப்பாக இடப்புறமாக நிற்கும் மயில் மீது மேற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். இத்திருக்கோயில் செவ்வாய் தோஷம் நீக்கும் திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கழுகுமலை மலைக்குன்றை சுற்றி கிரிவலம் நடைபெறுவதால் திருவண்ணாமலைக்கு இணையாகவும், மலைக்குன்றின் அடியில் முருகன் அருள்பாலிப்பதால் தமிழகத்தின் தென்பழனி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கழுகுமலை கழுகாலசலமூர்த்தி குடவரைக் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா பெரும் சிறப்பு கொண்டதாகும். ஏனெனில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுவதற்கு முதல்நாள் மாயவடிவம் கொண்ட தாரகாசூரனை வதம் செய்யும் காட்சி கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்நிலையில் தற்போது கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் 26ந்தேதி துவங்குகிறது. இதில் 26ந்தேதி துவங்கும் விழாவின் ஒவ்வொரு நாளும் வள்ளி தெய்வானையுடன் முருகன் பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதிஉலா வருகிறார். மேலும் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவு, இலக்கிய கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம், இன்னிசை பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 30ந்தேதி ஐந்தாம் திருநாளன்று சுவாமி வெள்ளி சப்பரத்தில் திருவீதிஉலா வந்து தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், மறுநாள் 31ந்தேதி ஆறாம் திருநாளன்று சூரசம்ஹாரமும் நடக்கிறது. மேலும் நவ. முதல் தேதி ஏழாம் திருநாளன்று சுவாமி தடம் பார்த்தலும், 2ந்தேதி எட்டாம் திருநாளன்று தபசுக்காட்சியும், 3ந்தேதி ஒன்பதாம் திருநாளன்று திருக்கல்யாணமும், 4ம் தேதி பத்தாம் திருநாளன்று சுவாமி வள்ளி தெய்வயானை பிராட்டியர்களுடன் பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் திருவீதிஉலா வருதலும், பட்டினப்பிரவேசமும் நடக்கிறது. இதையடுத்து விழாவின் நிறைவாக வரும் 5ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை எட்டயபுரம் மன்னர் தங்கசுவாமி தலைமையில், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் மேற்பார்வையில், பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.