பதிவு செய்த நாள்
30
ஜன
2017
02:01
கரூர்: கரூர், வஞ்சுலேசுவர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, பிரம்ம தீர்த்த குளம், தீர்த்த சம்மேளன விழா வரும், 9ல் நடக்கிறது. கரூர் நகரில், அமராவதி ஆற்றையொட்டி, 100 ஆண்டுகள் பழமையான வஞ்சுலேசுவர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிரம்ம தேவன் வழிபட்டு, படைக்கும் ஆற்றலை பெற்றார் என்பது, புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தை சீரமைக்கும் பணி, பல மாதங்களாக நடந்தது. இந்நிலையில், தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராஜாராம் கூறியதாவது: பக்தர்கள் அளித்த நன்கொடை உதவியுடன், பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்ம தீர்த்த குளம் முழுவதும், விலை உயர்ந்த கற்களால் புனரமைக்கப்பட்டுள்ளது. தீர்த்த சம்மேளன திருவிழா வரும், 8ல் விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 9ல், காலை, 10:45 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீர்த்த சம்மேளன விழா நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.