பதிவு செய்த நாள்
30
ஜன
2017
02:01
பு.புளியம்பட்டி: கொண்டையம்பாளையம், பொன்மலை ஆண்டவர் கோவிலில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தேரோட்டம் நடக்கிறது. புன்செய்புளியம்பட்டி அருகே, வரப்பாளையம் பஞ்சாயத்து, கொண்டையம்பாளையத்தில், பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்ட பக்தர்களும் வருகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. நடப்பாண்டு விழா, பிப்.,7ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்.,9ல் தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக, பிப்.,2ல் தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.
28 ஆண்டுகளுக்கு பிறகு: இக்கோவில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தேர் சக்கரம், மேடை பழுதானது. இதனால், 1989 முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பழுது பார்க்க கோரிக்கை மேல் கோரிக்கை சென்றது. இந்நிலையில், 2011ல் அ.தி.மு.க., அரசு பழுதடைந்த தேரை புதுப்பிக்க, 33 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்தது. இதை தொடர்ந்து. 2012ல் பழுது பார்ப்பு பணிக்கு, 19.75 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. மீதி தொகையை, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மூலம், நன்கொடை வசூல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2013ல் தேர் புதுப்பிக்கும் பணி துவங்கியது. தற்போது, சிற்ப வேலைப்பாடுகளுடன் பணி நிறைவடைந்து, தைப்பூசத் தேரோட்டத்துக்கு தயாராக உள்ளது. கோவிலில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடப்பதால், பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.