பதிவு செய்த நாள்
02
பிப்
2017
11:02
சிக்மகளூரு: கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டம், சிருங்கேரியில் உள்ள தட்சிணாம்னாயா ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில், சாரதாம்பாள் கோவிலில், நேற்று தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடந்தது. ஜனவரி, 28ல், லட்சம் மோதக கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. இதையொட்டி, நாடு சுபிட்சமடையவும், மனிதர்கள் அனைவரும் நலமாக வாழவும், சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நேற்று காலை, 9:00 மணிக்கு சன்னிதானத்தில், சாரதாம்பாள் கோவில் தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து விசேஷ அர்ச்சனை, உட்பட வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அபிஷேகத்துக்காக, கங்கை, துங்கா, நர்மதா, கோதாவரி உட்பட, பல்வேறு நதிகளிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டிருந்தது. கர்ப்பகிரஹ விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர். ஆதி சங்கரர் துவக்கிய தலையாய மடம் சிருங்கேரி என்பதும், இங்குள்ள அன்னை சாரதா வழிபாடு, அவர் காலத்தில் இருந்து தொடர்கிறது என்பதும் விசேஷமானது. அன்னை சாரதையின் தங்க விக்ரகம், இன்றுள்ள கோவில் கட்டட அமைப்பில் நுாறாண்டுகளாக உள்ளது. தொடர்ந்து இம்மடத்தை வழிநடத்திய ஜகத்குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். ஆகவே அதே மரபில், அன்னை சாரதாம்பாள் கோவில் சுவர்ண கோபுர கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டனர். கும்பாபிஷேக வைபவத்திற்கு பின் பாரதி தீர்த்த சுவாமிபேசியதாவது:எங்களது குரு சந்திரசேகர பாரதி சுவாமி, இந்த கோவிலை, 1916ல், பல சிறப்புகளுடன் புனரமைத்தார். சாரதாம்பாள் கருணையாலும், என் குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமி ஆசியாலும், இப்போது தங்க கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.சனாதன தர்மம் மேலோங்கவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன், தர்மநெறியில் வாழ அன்னை சாரதாம்பாள் அருளை வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அருளாசி வழங்கினார்.அதை தொடர்ந்து, கோவில் கருவறையில் அமைந்த சாரதாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜன., 30ல் துவங்கிய, அதி ருத்ர மகா யாகம், வரும், 10ம் தேதி வரை நடக்கிறது. அத்துடன், கோடி குங்கும அர்ச்சனையும், இவ்விழாவை ஒட்டி நடக்கிறது. இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க, ஏராளமான பக்தர்கள் சிருங்கேரியில் குவிந்துள்ளனர்.