ராமேஸ்வரம் கோயிலில் தைப்பூசம்: பிப்.10ல் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2017 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு பிப்.,10ல் கோயில் நடை சாத்தப்படுகிறது. ராமேஸ்வரம் திருக்கோயிலின் உபகோயிலான லெட்சுமணேசுவரர் கோயில் தெப்ப குளத்தில் பிப்.,9ல் விநாயகர் தெப்ப உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை ராமநாதசுவாமி கோயிலில் ஸ்டிபகலிங்க பூஜையும், தொடர்ந்து 5 கால பூஜைகளும் நடக்கிறது.
காலை 10:20 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். மதியம் 2:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் வலம்வருகின்றனர். தெப்ப திருவிழாவுக்காக கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடானதும் 10ம் தேதி காலை 10:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தெப்ப திருவிழாவுக்கு பின் சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம, பள்ளியறை பூஜைகள் நடக்கிறது. இவை முடிந்ததும் மீண்டும் திருக்கோயில் நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.