பதிவு செய்த நாள்
03
பிப்
2017
01:02
கோபி,: குளிக்க உதவிய வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதால், ஆட்டோவில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு, பழநிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாவது படை வீடான பழநிக்கு, ஆண்டுதோறும் பக்தர்கள் விரதமிருந்து, பாத யாத்திரை செல்வர். கோவை, திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களில் இருந்து செல்வோர், பெரும்பாலும் ஈரோடு மாவட்டத்துக்குள் நுழைந்து, காங்கேயம், தாராபுரம் வழியாக பழநியை அடைவர். ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களில், தண்ணீர் செல்லும். இதனால், இவர்களுக்கு குளிக்க வசதியாக இருந்தது. கடந்தாண்டு போதிய மழையின்றி, பவானிசாகர் அணையில் வழக்கமான காலத்துக்கு நீர் திறக்கவில்லை. வாய்க்கால்கள் தற்போது வறண்டு கிடக்கின்றன.பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், குளிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்நிலையில் தண்ணீர் வசதியுடன், ஈரோடு மாவட்டம் கோபி, அத்தாணி அருகே செம்புளிச்சாம் பாளையத்தை சேர்ந்த, ௧௦௦க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள், நேற்று காலை, பாத யாத்திரை துவங்கினர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வறட்சியால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்டோவில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் கொண்டு செல்கிறோம். செல்லும் வழியில் இலவசமாகவோ, பணத்துக்கோ கிடைத்தால், தண்ணீர் வாங்கிக் கொள்வோம். அப்படி கிடைக்காத பட்சத்தில், எங்கள் ஊருக்கே அலைபேசியில் தகவல் தருவோம். அவர்கள், ஆட்டோவில் தண்ணீர் கொண்டு வந்து விடுவர். கூடுதல் செலவாக இருந்தாலும், கோவிலுக்கு செல்வதால், தண்ணீருக்கு ஆகும் செலவு எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.