பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
திருநெல்வேலி: "திருநெல்வேலி என்ற பெயருக்கு காரணமான நெல்லுக்கு வேலியிட்ட விழா, நெல்லையப்பர் கோயிலில் பிப்.,3 ல் நடந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் தைப்பூச திருவிழா ஜன.,31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் திருநாளான பிப்.,3 நெல்லுக்கு வேலியிட்ட விழா நடந்தது. முன்னொரு காலத்தில், வேதபட்டர் என்பவர் நெல்லையப்பருக்கு அமுது படைப்பதற்காக கோயில் முன் நெல் காய வைத்திருந்தார். தாமிரபரணியில் குளித்து விட்டு திரும்பும் போது மழை பெய்தது.
"மழையில் நெல்மணிகள் நனைந்திருக்குமே... சுவாமிக்கு எவ்வாறு அமுது படைப்பேன்? என மழையில் நனைந்தபடியே கோயிலுக்கு வந்தார். அங்கு வேலியிட்டது போல நெல்மணிகளை தவிர மற்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது; நெல் நனையாமல் இருந்தது. "சுவாமிதான் நெல்லுக்கு வேலியிட்டு காத்தார் என வேதபட்டர் மகிழ்ந்தார். அதுவரை வேணுவனம், "தாருகாவனம், "நெல்லுார் என, அழைக்கப்பட்ட ஊர், இந்நிகழ்வுக்கு பின் "திருநெல்வேலி என்ற பெயர் பெற்றதாக ஐதீகம்.
இந்நிகழ்வை மூர்த்திபட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். இரவில், பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்மன் வீதி உலா நடந்தது. பிப்., 9ல் தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. மறுநாள் சவுந்திரசபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடக்கும். பிப்.,11 இரவு 7:00 மணிக்கு வெளித் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது.