பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
சென்னை : சென்னையில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த, ஒன்பது நாட்களை நினைவு கூறும் வகையில், "சென்னையில் விவேகானந்தர் என்ற தலைப்பிலான, நவராத்திரி விழா, பிப்., 6ம் தேதி, விவேகானந்தர் இல்லத்தில் துவங்குகிறது.
நினைவு கூறல்: சுவாமி விவேகானந்தர், வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு, இந்தியா திரும்பினார். அப்போது, சென்னையில் அவர், ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அந்த இடம், விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படுகின்றது. விவேகானந்தர், சென்னையில் தங்கியிருந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், சில ஆண்டுகளாக, விவேகானந்தர் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு, "சென்னையில் விவேகானந்தர் என்ற பெயரில், சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில், விவேகானந்தர் நவராத்திரி விழா, பிப்., 6 முதல், 14ம் தேதி வரை, மெரினா கடற்கரையில் உள்ள, விவேகானந்தர் இல்லத்தில் கொண்டாடப்படுகிறது. அவற்றுடன், ஆன்மிக புத்தகக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இது குறித்து, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கவுதமானந்த ஜி மகராஜ், செயலர் விமுர்தானந்தர், சென்னை, பாரதிய வித்யாபவன் இயக்குனர் ராமசாமி, பார்த்தசாரதி சுவாமி சபா செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:
கண்காட்சி: சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், வெளிநாட்டினருக்கு இந்தியர்களின் பெருமையை உணர வைத்தது. அவர் இந்தியா திரும்பியதும், சென்னையில், ஒன்பது நாட்கள் தங்கி, சொற்பொழிவாற்றினார். இதை, நினைவுகூறும் வகையில், ஒன்பது நாட்களுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். விவேகானந்தர் நவராத்திரி நிகழ்ச்சியை, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபாலசாமி துவக்கிவைக்கிறார்.ஒன்பது நாளில் உபன்யாசம், நிவேதிதா நாடகம், சிக்கில் குருசரண், பியானோ கலைஞர் அனில் சீனிவாசன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி, பொம்மலாட்டம், நாட்டிய நாடகம் ஆகியவை நடைபெற இருக்கின்றன.
புத்தகக் கண்காட்சியில், 1,000 தலைப்புகளில், ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் நுால்கள், 50 சதவீதம் வரை, சலுகை விலையில் கிடைக்கும். கண்காட்சி, தினமும் மாலை, 2:00 மணி முதல், 8:00 மணி வரையும், நவராத்திரி நிகழ்ச்சிகள், மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி
வரையிலும் நடக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.