திருவாவடுதுறை ஆதினத்தில் குருபூஜை விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2017 05:02
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவாவடுதுறை கிராமத்தில் புகழ்பெற்ற, பழமையான திருவாவடுதுறை ஆதினம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தின் 24வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பளவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்திய அளவில் பெரிய ஆதினமான இவ்வாதினத்தின்கீழ் 80 கோயில்கள், 7 பள்ளிகள் உள்ளது. இந்தியா மட்டுமன்றி வெளி நாடுகளிலும் 60 சைவச் சித்தாந்த பயிற்சி மையங்கள் மற்றும் 60 திருமுறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க ஆதினத்தை 14ம் நூற்றாண்டில் ஆதின குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் தோற்றுவித்தார். இவரது குருபூஜை ஆண்டுதோறும் தைமாதம் அசுவதி நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தை, அசுவதி நட்சத்திரத்தில் ஆதின குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆதினத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் புனிதநீர் வைக்கப்பட்டு நடராஜர் மற்றும் ஆத்மார்த்த பூஜைக நடத்தப்பட்டு, புனிதநீர் வைக்கப்பட்டிருந்த கடம் எடுத்துவரப்பட்டு குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நமச்சிவாய மூர்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஆதின குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பளவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்துவைத்தார். குருபூஜையில் சூரியனார்கோயில் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பன்டார சன்னிதி, திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீலஸ்ரீ ஞனசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதின தம்பிரான்க ள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதின குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளை தரிசனம் செய்தனர். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பேருக்கு ஆதின குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பளவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நினைவு பரிசு வழங்கி, உருத்ராட்ச மாலை அணிவித்து பொற்கிழி வழங்கினார்.