பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் சரவணப் பொய்கையை, மாசுபடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகர் பா.ஜ., தலைவர் சசிராமன் தாக்கல் செய்த பொதுநல மனு: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இங்கு சரவணப் பொய்கையின் பரப்பு 15 ஏக்கர். இதிலிருந்து தினமும் சுவாமியின் வேலுக்கு அபிஷேகம் செய்ய, புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இப்பொய்கையானது தெய்வீகப் புலவர் நக்கீரர் தவம் செய்த சிறப்புக்
கொண்டது. இதில் 2016 செப்.,1 ல் மீன்கள் இறந்து மிதந்தன. சமூக விரோதிகள் விஷம் போன்ற வேதிப்பொருளை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மீன்கள் மற்றும் சரவணப் பொய்கையின் புனிதத் தன்மையை பாதுகாக்க அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் செய்தனர். நடவடிக்கை இல்லை. மீண்டும் மீன்கள் இறந்து, பொய்கையில் நீர் மாசுபட்டது.
"சரவணப் பொய்கையை நாறடிக்கும் 19 ஆயிரம் பேர், மாணவர்கள் ஆய்வில் அதிர்ச்சி, என்ற தலைப்பில் 2016 அக்.,19 ல் "தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. சரவணப் பொய்கையில் மீன் பிடிக்க குத்தகை அனுமதிப்பதை தடை செய்ய வேண்டும். சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். புனிதத் தன்மையை பாதுகாக்க வேண்டும். மாசுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு உத்தரவு: சரவணப் பொய்கை மாசுபடாமல் தடுக்க அறநிலைத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், திருப்பரங்குன்றம் கோயில் துணை கமிஷனர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.