பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் புடைசூழ பிப்.,3 கொடியேற்று உற்சவம் நடந்தது.
முருகனின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா, 16 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி, பிப்., 2, இரவு 7:00 மணிக்கு, விநாயகர், வாஸ்து பூஜைகளுடன் துவங்கியது. பிப்.,3 காலை, 7:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் முன்னிலையில், மங்களவாத்தியங்கள் முழங்க சேவற்கொடி, கோவில் மண்டபத்திலுள்ள, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்று விழாவையொட்டி, முருகன் வள்ளி, தெய்வாணையோடு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பிப்., 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு தங்க மயில் வாகனக்காட்சியும், இரவு 7:30 மணிக்கு, சந்தனக்காப்பும் நடைபெறுகின்றன. தைப்பூசமான, பிப்., 9ம் தேதி காலை 7:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு, வெள்ளையானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. பிப்., 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும், குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பிப்.,11ம் தேதி 11:00 மணிக்கு, வசந்த உற்சவம் நடைபெறுகிறது.