பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த, 4 செட்டிபாளையம் பிரியங்கா நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர், முத்துமாரியம்மன், மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அரசு வேம்பு திருமண நிகழ்ச்சி, பிப்.,3 நடைபெற்றது.
இதையொட்டி, பிப்.,2 மாலை, வாஸ்து பூஜை, முதற்காலயாக பூஜை, கும்ப அலங்கார பூஜை, ஸ்ரீ மங்கள விநாயகர், நாகர் சிலைகளை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:30க்கு இரண்டாம் கால யாக பூஜை, 6:30 மணிக்கு பூர்ணாகுதி வழிபாடு,
காலை, 7:00 மணி முதல், 7:30 மணிக்குள், செல்வ விநாயகர், முத்துமாரியம்மன், மங்கள விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, பிரபு குருக்கள், மூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், அரசுக்கும், வேம்புக்கும் திருகல்யாணம் நடந்தது. பெண் வீட்டார் சார்பில் தேங்காய், பழம், பட்டுப்புடவை, வளையல், பொட்டு உள்ளிடவையும்;
மாப்பிள்ளை வீட்டார் சார்பில், பட்டு வேஷ்டி, துண்டு உள்ளிட்ட சீர் வரிசைகளும் எடுத்து வரப்பட்டு, திருமணம் நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.