திருமாலின் அவதாரங்களில் ஆவேச அவதாரமாக விளங்குவது நரசிம்மம். இரணியனை சம்ஹாரம் செய்த பின்னும், அவருக்கு கோபம் தணியவில்லை. தேவர்கள் அவருடைய உக்ரத்தைத் தணிக்கும் ஆற்றல் திருமகளுக்கே உண்டு என்பதை உணர்ந்தனர். திருமகளும் விரைந்து வந்து செழுங்கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள். சூரியனைக் கண்ட பனித்துளி போல, கோபம் மறைந்து சாந்தமாக மாறினார். லட்சுமி தேவியைத் தன் மடியில் ஏற்றுக் கொண்டு அருள்புரிந்தார். இதனால் அவருக்கு மாலோலன் என்ற சிறப்புப் பெயர் உண்டானது. நரசிம்மருக்குரிய கோலங்கள் அனைத்திலும் திருமகள் இடம்பெற்றிருப்பாள். யோகநரசிம்மராக விளங்கும்போது, மார்பில் யோகலட்சுமியாகவும், உக்ரவடிவில் கோபத்துடன் காட்சிதரும்போது வீரலட்சுமியாகவும், சாந்த நிலையில் திருமகளை மடியில் ஏற்றிக் கொண்டிருக்கும்போது சாந்தலட்சுமியாகவும் விளங்குவதாக ஐதீகம். நவநரசிம்மர் எழுந்தருளியிருக்கும் அகோபிலத்தில்(ஆந்திராவில் உள்ள திவ்யதேசம்) மாலோல நரசிம்மரைத் தரிசிக்கலாம்.