பதிவு செய்த நாள்
06
பிப்
2017
02:02
பல்லடம்: பழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முருக பக்தர்கள் பேரவை மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். உலகில் தமிழர்கள் வாழும் பிற நாடுகள் கூட, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழக்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டுமென, அரசுக்கு மனு அளித்துள்ளோம். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். பெரும்பாலும் நெடுஞ்சாலைகளையே கடந்து செல்வதால், பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான நடைபாதை மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட வேண்டும். பழநியில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பஸ் என்ற பெயரில், கட்டண கொள்ளை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சாதாரண கட்டணத்தில், பக்தர்களின் சிரமத்தினை குறைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில்தான் முருக பக்தர்கள் அதிகம் உள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்துகொள்ளும், லட்சக்கணக்கான பக்தர்களின் பாது காப்பினை கருதி, மேற்கூறிய வளர்ச்சி பணிகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.