காஷ்யபர் என்னும் மகரிஷிக்கும், வினதைக்கும் பிறந்த பிள்ளை கருடன். விஷ்ணுவின் வாகனமாக இவருக்கு பெரியதிருவடி என்ற சிறப்புப் பெயருண்டு. கருடனின் தாய் வினதையைக் கத்ரு என்பவள் அடிமையாக்கினாள். அவளிடமிருந்து காப்பதற்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைக் கடந்து அமுத கலசத்தைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் இவர். பெருமாளின் பக்தர் என்னும் அடிப்படையில் கருடாழ்வார் என்றே குறிப்பிடுவர். பெரிய சிறகுகளை விரித்தும், கைகள் குவித்த படியும் கோயிலில் கருவறைக்கு முன்னர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் கருட சேவையன்றே, ஆண்டாள் நாச்சியாரின் சூடிக்களைந்த மாலையைப் பெருமாள் ஏற்றுக் கொள்கிறார். பொதுவாக விஷ்ணு கோயில்களில் கருட வாகன சேவையில் தரிசிப்பதை மக்கள் பாக்கியமாக கருதுகின்றனர். சூரியன் சிம்மராசியில் பிரவேசிக்கும் ஆவணி சுவாதியில் இவர் அவதரித்தார். இந்த ஆண்டு சற்று முன்னதாக, பட்சிராஜர் திருநட்சத்திரம் ஆடிமாதத்திலேயே (ஆகஸ்ட்6) கொண்டாடப்படுகிறது.