பதிவு செய்த நாள்
07
பிப்
2017
11:02
ஆர்.கே.பேட்டை: சிவராத்திரியில், சிவனுக்கு படைக்கப்படுவதைக் கருதி, சர்க்கரைவள்ளி கிழங்கு கொடிகளை, விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கொடியின் செழிப்பு, கிழங்கின் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
கிழங்கு வகையில், இனிப்புச் சுவையை இயற்கையாக கொண்டது சர்க்கரைவள்ளி. சிவராத்திரிப் பண்டிகையில் சிவனுக்கு படைக்கப்படும் கொள்ளு, காராமணி, பயறு வகைளுடன் சர்க்கரைவள்ளி கிழங்கும் இடம் பிடிக்கும். வரும், 24ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படவுள்ள சிவராத்திரி விரதத்தைக் கருத்தில் கொண்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு கொடிகளை பயிரிட்டுள்ளனர். கிழங்கு விவசாயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கொடிகள் செழிப்பாக வளரவும், பிரதான வேர் தவிர வேறு எங்கும் பதியம் அமையாமல் பார்த்துக்கொள்வதும் தான். கொடி படரும் இடங்களில் எல்லாம் வேர் விட்டால், அங்கெல்லாம் கிழங்குவளரும். அனைத்துக்கும் தேவையான சத்து கிடைக்காது. இதைக் கருத்தில் கொண்டு, அடி வேர் தவிர, பதியம் போட்ட பிற இடங்களில் வேர் வளராதபடி, நன்கு கவனித்து, பயிரிட்டுள்ளனர். வெளியூரில் இருந்து கொண்டுவரப்படும் வள்ளிக்கிழங்கு, தற்போது, கிலோ, 20 - 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில், உள்ளூர் கிழங்கு, சந்தைக்கு வரத்துவங்கினால், விலை மேலும் சரியும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.