பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
சென்னை : ”மனிதனின் தேவையை புரிந்து, சேவையாற்றுவதே இறை தொண்டு,” என, விவேகானந்தர் நவராத்திரி விழாவில், சுவாமி கவுத மானந்த மகராஜ் பேசினார். விவேகானந்தர், சென்னையில் தங்கிய ஒன்பது நாட்களை கொண்டாடும் வகையில், விவேகானந்தர் நவராத்திரி விழா சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நேற்று துவங்கியது. ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி பேசியதாவது: இந்தியாவின் பெருமையை இந்தியர்களுக்கு புரிய வைத்தவர் விவேகானந்தர். அவரது நுால்களை நாம் வாங்கி படிப்பதோடு, அதிலுள்ள சாராம்சங்களை சிறார்களுக்கும் போதிக்க வேண்டும். நமக்கு தெரிந்த விஷயங்களை விட தெரியாதது தான் அதிகம். பாரம்பரியத்தை விட்டு நாம் விலகி வருகிறோம். ஒரு விஷயத்தின் தாத்பரியம் தெரிந்தால் தான், அதை மற்றவர்களுக்கு புரியும் படி விளக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ் பேசியதாவது: நாட்டிற்கும், உலகிற்கும் எது நல்லதோ அது தான் விவேகானந்தர் சிந்தனையில் இருந்தது. தன்னை மனிதன் என அழைத்தவரை அவர் தெய்வமாக பார்த்தார். அவரின் அத்வைதம் தான் நமக்கு வேண்டும். மனிதனின் தேவையை அறிந்து, சேவையாற்றுவது, இறை தொண்டிற்கு சமம். அதைத்தான் விவேகானந்தர் போதித்தார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், நல்லி குப்புசாமி, இந்து என்.ரவி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, கேரள உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக, டாக்டர் சுதா ராஜா குழுவினரின் பக்தி பாடல்கள் இடம் பெற்றன. நிறைவாக வேளுக்குடி கிருஷ்ணனின் கீதையின் சாரம் எனும் தலைப்பிலான உபன்யாசம் நிகழ்ந்தது.