பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
மேட்டுப்பாளையம் ;மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டிய சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் குட்டையூர் மாதேஸ்வரன் மலை கோவில் அடிவாரத்தில், சத்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில், மூன்று கோடி ரூபாய் செலவில் சீரடி சாய்பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிேஷக விழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 7:45 மணிக்கு சீரடி சாய்பாபாவின் கல் சிலை கருவரையில் பிரதிஷ்டை செய்தனர். பின் சீரடி சாய்பாபா கோவிலில் இருந்து வந்த தலைமை குருக்கள் ஸ்வப்நில் பாலாசாகேப், சங்கேட் பாலாசாகேப், கணேஷ் ஜோஷி, வைபவ் டிம்பர் ஜோஷி, பிரசாத் ஆகியோர் யாகபூஜைகளை செய்து கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். பின்பு பாபாவுக்கு ராஜ அலங்காரம் செய்து ஆரத்தி எடுக்கப்பட்டது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நடிகர் விவேக், சத்குரு சாய் சேவா சங்க நிர்வாகிகளிடம் கோவில் நன்கொடை வழங்கி பேசுகையில், எல்லாம் அரசு செய்யும் என, எதிர்பார்க்கக் கூடாது. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும், என்றார். விழாவில் திரைப்பட பின்னணி பாடகர் மனோ, சூப்பர் சிங்கர் பாடகர்கள் குழுவினரின் சாய் பஜன் நிகழ்ச்சியும், ராமகான சபா குழுவினரின் நாமசங்கீர்தனம், சத்திய சாய் சேவா சமிதி குழுவினரின் பஜனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்க நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், ராஜமாணிக்கம், சுதர்சன், ரமேஷ், மகேஷ்குமார், செந்தில்குமார், சதீஷ்குமார், சம்பத், கிருஷ்ணசாமி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ரவிசங்கர் வாழும் கலை அமைப்பு சார்பில், ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நடிகர் விவேக் துவக்கி வைத்து மரக்கன்றுகள் வழங்கினார். அதை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி பெற்றுக் கொண்டார்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வாழும் கலை அமைப்பினர் மரக்கன்றுகளை வழங்கினர்.