பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணி மற்றும் மாலை, 4:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, குதிரை வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, தைப்பூசம் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள், ஐந்து மணி நேரமும், 50, 25 மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசனத்தில், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமும், நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.