பதிவு செய்த நாள்
23
பிப்
2017
11:02
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கிராம கோவில்களில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. உடுமலை பூளவாடி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 24ம் தேதி, காலை, 7:30 மணிக்கு, மகா சிவராத்திரி விழா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. இரவு, 10:00 மணிக்கு, அம்மன் அழைத்து வருதல், தீர்த்த காவடி செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், வரும் 25ம் தேதி காலை, 5:00 மணிக்கு, விசேஷ அலங்கார பூஜை, பள்ளையம் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. காலை, 10:30 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பூளவாடி: மகாலட்சுமி அம்மன் கோவிலில், 24 ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு அம்மை அழைப்பு, மகாலட்சுமி திருவீதி உலா ஆகிய பூஜைகள் நடக்கிறது. பூளவாடி வீரமல்லம்மன், கன்னிமார் கோவிலிலும், பள்ளைய பூஜை நடக்கிறது. சோமவாரப்பட்டி அமரபுயங்கரீசுவரர் கோவிலில், 24ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, முதல் கால பூஜை துவங்குகிறது. நான்கு கால பூஜைகளுடன், சிவராத்திரி விழா கோவிலில் நடக்கிறது.
மடத்துக்குளம்: கடத்துார் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேசுவரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா வரும் 24ம் தேதி நடக்கிறது. சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டன. இதில் முக்கியமாக குறிப்பிடப்படுவது கடத்துாரில் கோமதியம்மன் உடனமர்ந்த அர்ச்சுனேசுவரர் கோவிலாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, வரும் 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு யாகவேள்வியுடன் இந்த விழா தொடங்குகிறது. முதல்கால பூஜை இரவு, 6:00 முதல் 9:00 மணி வரையும், இரண்டாம் கால பூஜை, 9:00 முதல் 12:00 மணி வரையிலும், மூன்றாம் கால பூஜை 12:00 முதல் அதிகாலை 3:00 மணிவரையும், நான்காம் கால பூஜை அதிகாலை, 3:00 முதல்6:00 மணிவரையும் நடக்கிறது. இந்த நான்கு கால பூஜைகளில், அபிேஷகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை மகாதீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்புக்கு போலீசார் பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.