பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
கொளத்தூர்: சித்தேஸ்வரர் கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான, மூலிகை கொண்டு உருவாக்கிய தனித்தனி சிவலிங்கங்கள், இன்று, பக்தர்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், கொளத்தூர், காவேரிபுரம் பஞ்சாயத்து, பாலவாடியில், மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையோரம், சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, கடந்த ஆண்டு சிவராத்திரியில், நவதானியங்கள் மூலம், தனித்தனியாக ஒன்பது சிவலிங்கங்கள் உருவாக்கி, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இன்று, சிவராத்திரி முன்னிட்டு, 27 நட்சத்திரங்களுக்கான தனித்தனி மூலிகைகள் மூலம், 27 சிவலிங்கங்கள் பக்தர்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யும், காவேரிபுரம் சித்த வைத்தியர் குப்புசாமி கூறியதாவது: ஒவ்வொரு மனிதரும், 27ல், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பர். அந்தந்த நட்சத்திரத்துக்கு என, தனி மூலிகை உள்ளது. அஸ்வினி நட்சத்திரத்தின் மூலிகை எட்டி மரம், பரணிக்கு நெல்லி, கிருத்திகைக்கு அத்தி மரம். அதுபோன்று, 27 நட்சத்திரங்களுக்கும், தனித்தனி மூலிகை மரம், செடிகள் உள்ளன. ஒருவருக்கு உடல்நிலை பாதித்தால், அவர் நட்சத்திர மூலிகையை உணவிலோ, நாட்டு மருந்திலோ கலந்து சாப்பிட்டால் நோய் குணமாகும். உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தங்களுக்கான நட்சத்திர மூலிகை செடி அல்லது மரங்களை, வீட்டு வளாகத்தில் நடவு செய்தால், அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நன்மையை கொடுக்கும். மூலிகை கொண்டு உருவாக்கிய சிவனை வழிபாடு செய்வதால், நன்மை ஏற்படும். அனைத்து பக்தர்களுக்கும், அவர்களது நட்சத்திர மூலிகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை நடவுசெய்து பலன் அடைவதற்காகவும், 27 நட்சத்திரங்களுக்கான மூலிகைகளை சேகரித்து, அதைக்கொண்டு தனித்தனியாக, 27 சிவலிங்கங்களை உருவாக்கி, இன்று சிவராத்திரிக்காக, பக்தர்கள் தரிசனத்துக்கு, கோவில் வளாகத்தில் வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
27 நட்சத்திரங்களுக்கான மூலிகை விருட்சம்: அசுவினி - எட்டிமரம், பரணி - நெல்லிமரம், கார்த்திகை - அத்திமரம், ரோகிணி - நாவல்மரம், மிருகசீரிடம் - கருங்காலி, திருவாதிரை - செங்காலி, புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசமரம், ஆயில்யம் - புன்னைமரம், மகம் - ஆலமரம், பூரம் - பலாசுமரம், உத்திரம் - அலரிமரம், அஸ்தம் - அத்திமரம், சித்திரை - வில்வமரம், சுவாதி - மருதமரம், விசாகம் - விளாமரம், அனுஷம் - மகிழமரம், கேட்டை - வெப்பாலை, மூலம் - மாமரம், பூராடம் - வஞ்சிமரம், உத்திராடம் -பலாசுமரம், திருவோணம் - எருக்கு, அவிட்டம் - வன்னிமரம், சதயம் - கடம்புமரம், பூரட்டாதி - மருதமரம், உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை.