பதிவு செய்த நாள்
27
பிப்
2017
12:02
வாலாஜாபேட்டை: தன்வந்திரி பீடத்தில், மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்க, ஐந்து ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வரும் பொதுத்தேர்வில் பயம் நீங்கி தேர்வு எழுதவும், அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கவும், சரஸ்வதி, லட்சுமி, தட்சிணாமூர்த்தி, வித்யா லட்சுமி, வித்யா கணபதி என, ஐந்து ஹோமங்கள் நேற்று நடத்தப்பட்டன. முரளிதர சாமிகள் ஹோமம் நடத்தி, 10 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக பேனா வழங்கினார். தொடர்ந்து, தன்வந்திரி ஹோமம், கால சர்ப தோஷம் நிவர்த்தி ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், மஹா ப்ரத்தியங்கிரா ஹோமம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி, வேலூர் மாவட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.