பதிவு செய்த நாள்
03
மார்
2017
12:03
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று பகல் 11:00 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதையடுத்து, 11:15 மணியளவில் ஊர்வலமாக கொடி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிக்கு பூஜை செய்து, வன்னியடி சுற்று கொடி மரத்திற்கு பால் அபிஷேகத்துடன், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, மற்ற நான்கு கொடி மரங்களிலும் கொடியேற்றப்பட்டன. அதில், 500க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
48 கேமராக்கள்: பிரம்மோற்சவத்தில் விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல், தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கூடுவர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவர். அதைத் தடுக்க, கோவில் நுழைவு வாயில், உள்பிரகாரங்கள், அம்மன் சன்னதி உள்ளிட்ட 32 இடங்களில் நிரந்தரமாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து தேரோட்டத்தின்போது மக்கள் அதிகளவில் கூடும் சன்னதி வீதியில், ஆற்றுப் பிள்ளையார் கோவில் முதல் கடை வீதி சந்திப்பு வரை 16 இடங்களில் கேமரா பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.