பதிவு செய்த நாள்
06
மார்
2017
11:03
திருப்பூர்: தினமலர் செய்தி எதிரொலியாக, திருப்பூர் அருகேயுள்ள, பழமையான சமணர் கோவிலை, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவினாசி - புளியம்பட்டி சாலையில் உள்ள ஆலத்துாரில், 1,100 ஆண்டுகள் பழமையான அமணீஸ்வரர் கோவில் உள்ளது.
சிற்ப வேலைப்பாடுகள் : பல நுாற்றாண்டுகளுக்கு முன், மைசூர் பகுதியில் இருந்து, வணிக பெருவழியில் வந்த சமண மதத்தினர், வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற சமண கோவிலை அமைத்தனர். காலப்போக்கில் அமணீஸ்வரர் கோவிலாக பெயர் மருவியுள்ளது.ஒரு ஏக்கர் பரப்பளவில், முழுவதும் கற்களால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இக்கோவில், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சமணர்களின் வாழ்வியல் நுட்பங்கள், கல்விச்சேவை, கொங்கு சோழர்கள் பலர் திருப்பணி செய்தது, பழமையான வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் மூலம் ஏராளமான செய்திகளை தாங்கியிருந்த இக்கோவில், அடையாளத்தை இழந்து வருகிறது.இது குறித்து, பிப்., 21ல், நமது நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது.
தொல்லியல் துறை : இதையடுத்து, பழமை மாறாமல், இக்கோவிலை மீட்க, கோவையைச் சேர்ந்த அகிம்சை நடை குழுவினர், தமிழ் சமணர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். தொல்லியல் துறை அறிஞர் (ஓய்வு) மணி, வரலாற்றுப் பேராசிரியர் மணி மற்றும் கோவையைச் சேர்ந்த சமணர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், ஆலத்துார் சென்று, கோவிலை பார்வையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் கோவிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அக்குழுவினர் கூறுகையில், இக்கோவிலில், சமணர்களுக்கும், தமிழர்களுக்கும் இருந்த தொடர்பு, கலாசாரம், நிர்வாக அமைப்புகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. கோவிலை, தொல்லியல் துறை அனுமதியுடன், பழமை மாறாமல் புதுப்பித்து, வழிபாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவிலை அடையாளம் காட்டிய, தினமலர் நாளிதழுக்கு நன்றி என்றனர்.