பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
புதுச்சேரி : மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, வைத்திக்குப்பம் கடற்கரையில் ௨௫௦க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் நேற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக கடல் தீர்த்தவாரி உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். இதில், தீவனுார் பொய்யாமொழி விநாயர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர் உள்ளிட்ட திண்டிவனம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளான கோவில்களிலிருந்து, சுவாமிகளும் மற்றும் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும் தீர்த்வாரி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு மாசிமாக தீர்த்தவாரி உற்சவம் வரும் ௧௨ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, நகராட்சி ஊழியர்கள் ௨௫௦க்கும் மேற்பட்டோர் நேற்று, தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
வைத்திக்குப்பம் செல்லும் சாலை, மாசிமக தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கிடந்த குப்பையை சுத்தம் செய்தனர். புதுச்சேரி நகராட்சி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் செயற்பொறியாளர் சேகரன், உதவி பொறியாளர்கள் மலைவாசன், சிவபாலன் மற்றும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் காலை 6:30 மணி முதல் 10:௦௦ மணி வரை இப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆணையர் சந்திரசேகர் கூறும்போது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மாசி மகத்தையொட்டி, வைத்திகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இப்பகுதியில் துப்புரவு பணி நடக்கும் என்றார்.