பதிவு செய்த நாள்
06
மார்
2017
12:03
கோவை : கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான, புனித அந்தோணியாரின் திருப்பண்டம், இத்தாலியில் இருந்து கோவை வந்தது.கிறிஸ்தவ திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர் ஒருவரின், உடலின் ஒரு பகுதி அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களின் ஒரு பகுதியை திருப்பண்டம் என்றழைக்கின்றனர்.கத்தோலிக்க கிறிஸ்தவர்களில், புனித அந்தோணியாரின் பக்தர்கள் அதிகம். பல நுாற்றாண்டுகளுக்கு முன், இறந்த அவரின் திருப்பண்டம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தாலி நாட்டிலிருந்து உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியிலுள்ள, முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், எடுத்துச்செல்லப்படுகிறது. இத்திருப்பண்டம், நேற்று கோவை கொண்டு வரப்பட்டது.காலை, 8:00 மணிக்கு கோவை நஞ்சுண்டாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் பங்குத்தந்தை, ஜான்சன் வீப்பாட்டுப்பரம்பில் தலைமையில், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராமநாதபுரத்திலுள்ள டிரினிட்டி சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்ட திருப்பண்டத்துக்கு, ஆயர் பால் ஆல்பர்ட் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு புனிதரின் திருப்பண்டம், பொதுமக்களின் தரிசனத்துக்கும், வழிபாட்டுக்கும் வைக்கப்பட்டது. தொடர்ந்து, எட்டிமடையிலுள்ள அசிசி சினேகாலயா ஆசிரமத்துக்கு, திருப்பண்டம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குனியமுத்துார் புனித மார்க் தேவாலய பங்குத்தந்தை ஜார்ஜ் மற்றும் ஏலியாஸ் தலைமையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, லத்தீன் முறைப்படி, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.