பதிவு செய்த நாள்
07
மார்
2017
11:03
பள்ளிபாளையம்: மழை பெய்ய வேண்டி, புதுப்பாளையம் மக்கள், ஒன்று கூடி கும்மியடித்து வருண பகவானை வழிபட்டனர். கடந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது, இதனால், நீர்நிலைகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும், குறைந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. மீண்டும் மழை பெய்தால்தான், தண்ணீர் பற்றாக்குறை தீரும். எப்போது மழை பெய்யும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை பெய்ய வேண்டி, பல இடங்களில் வருண பகவானை பலவிதமான முறையில் மக்கள் வணங்கி வருகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில், நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, கும்மியடித்து, நாட்டுப்புற பாடல்களை பாடி, வருண பகவானை வணங்கினர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஊர் முழுவதும், அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்களை பெற்று, கூழ் காய்ச்சி, படையல் இட்டு, பொதுமக்கள் ஒன்று கூடி மழை பெய்யவேண்டி, வருண பகவானை நினைத்து கும்மியடித்து பாட்டு பாடி, வழிபாடு செய்கிறோம். ஊர்மக்கள் ஒரே மனநிலையில் வருண பகவானை நினைத்து வழிபாடு செய்யும் போது, இயற்கையுடன் ஒத்துபோகும், அப்போது மழை பெய்யும் என்பது ஐதீகம். இது முன்னோர்களின் வழிபாடு. நிச்சயம் மழை பெய்யும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.