பதிவு செய்த நாள்
07
மார்
2017
11:03
கோவை : தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுக்க பட்டியல் சாராதா, ஒரு கால பூஜை நடைபெறும், கிராமக் கோவில்கள் மூன்றாயிரத்துக்கும் மேல் உள்ளன. இக்கோவில்களில் உள்ள பூசாரிகள், தட்டுக்காணிக்கை மற்றும் கோவில் நிலங்களால் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த பூசாரிகளுக்கு அறநிலையத்துறை கொடுக்கும் சொற்ப வருவாய் போதுமானதாக இல்லை என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பூசாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசு இதுவரை செவி சாய்க்காததால் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் வேடங்களில் எழுந்தருளிய கிராமக்கோவில் பூசாரிகள், படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை சிறப்பாக செய்து வரும் கடவுளரின் பிரதிநிதிகள் நாங்கள், எங்களின் மீது அரசு கணிவுப்பார்வையை திருப்புவதில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மழை பெய்யத் துவங்கியது. கடவுளரின் வேடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், சாலையில் கொட்டும் மழையில் ருத்ரதாண்டவம் ஆடினர். போலீசாரில் சிலர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்; ஒரு சிலர் பூசாரிகளின் நடனத்தை தங்களது மொபைல்போன்களில் வீடியோ எடுத்தனர். கோவை மாவட்ட பூசாரிகள் பேரவை அமைப்பாளர் ஜெகநாதன் கூறுகையில், அனைத்து பூசாரிகளுக்கும் மாதந்தோறும் அரசு ஊக்க தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கான வருட வருமான உச்சவரம்பை, 72,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெரும் பூசாரிகளின் காலத்துக்குப்பின் அவர்களது மனைவிக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து பூசாரிகளுக்கும் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா, இலவச மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசு இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வோம், என்றார்.