பதிவு செய்த நாள்
08
மார்
2017
11:03
திருப்பூர்: திருமுருகநாத சுவாமி கோவில், தேர்த்திருவிழாவில், மகாமக குளத்தில் வரும், 13ல் தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், சிவபெருமான் வேடுபறி நடத்தி, தேவாரம் பாடல் பெற்ற தலமாகவும், மகன் தந்தையை வணங்கிய தலமாகவும் விளங்கும், திருப்பூர், திருமுருகன்பூண்டியில், பழமையான திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தேர்த்திருவிழா, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சுவாமி, பூத வாகன, சிம்ம வாகன காட்சிகள் நடந்தன. இன்று, புஷ்ப விமான காட்சியும், நாளை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. வரும், 11 மற்றும் 12ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. வரும், 13ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது. இங்குள்ள மகாமக திருக்குளம் பழம்பெருமை வாய்ந்த சிறப்பு பெற்றது. கங்கை, ருத்ர மூர்த்திகள், விண்ணகத்து தேவர்களும் நீராடுவதாக ஐதீகம் உள்ளது. இக்குளத்தில், அம்மையப்பராக சுவாமி எழுந்தருளும், தெப்போற்சவம், 13ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக, தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டு, திருப்படிகள், திருமதில் முழுவதும் வர்ணம் பூசி அழகு படுத்துதுல் மற்றும் தண்ணீர் விடும் பணிகளும் நடந்து வருகிறது. தெப்ப உற்சவத்தன்று, மாமழை பொழியவும், விவசாயம், தொழில் வளம் பெருகவும், உடற்பிணி, உள்ளப்பிணி நீங்கி உயிர்கள் வாழவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. "மேகராக குறிஞ்சி பண்ணில் தேவார பாடல்கள் இசைத்தும், "அமிர்தவர்ஷினி ராகத்தில் நாதஸ்வரம் இசை நிகழ்வு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறையினர், சைவ சித்தாந்த சபை துணை தலைவர் உமாசங்கர், குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.