பதிவு செய்த நாள்
08
மார்
2017
11:03
ஊட்டி: பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா, கோலாகலமாக நடந்தது. ஊட்டி மசினகுடி அருகே, வனப்பகுதியில், அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப் படுவது வழக்கம். இந்தாண்டுடைய விழா, கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் காலை முதல் மாலை வரை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவிளக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஊட்டி, கூடலுார், மசினகுடி, மாவனல்லா உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கரகம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பொக்காபுரம் கோவிலை வந்தடைனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது; இரவு, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் சங்கர், தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். இதில் சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரவு முழுக்க பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவுக் கூடங்கள், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. சாலையில், வாகனங்கள் அணி வகுத்து வந்தால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, ஆணைகட்டி ஆனிக்கல் அம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். பல்வேறு ஆன்மிக அமைப்பு சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ஆதிவாசி மக்கள், படுகரின கிராமங்களை சேர்ந்த மக்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று வழிபட்டனர்.