பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
பொள்ளாச்சி: நெகமம் சத்திவிநாயகர், ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் இன்று மகாகும்பாபிேஷக விழா நடக்கிறது. பொள்ளாச்சி அருகே, நுாற்றாண்டு கால பெருமை மிக்க கிராமம் நெகமம். பழங்கால கோவில்கள், நினைவு சின்னங்கள் அதிகம் காணப்படும் நெகமத்தில் நெசவுத்தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக சிறந்து விளங்குகிறது. இம்மக்களை காக்கும் தெய்வதாக ஸ்ரீராமலிங்கசவுடேஸ்வரி அம்மன் விளங்குகிறார். பழமையான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நெகமம் கிழக்குவீதியில் எழுந்தருளியுள்ள சத்திவிநாயகருக்கு ஆகம சிற்ப சாஸ்திரப்படிகோபுரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு கோவில்களின் அஷ்டபந்தன மற்றும் புனராவர்தன மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது. முன்னதாக, கடந்த 6ம் தேதி மங்கள இசையுடன், பிள்ளையார் வழிபாடு, கோபூஜையுடன் திருவிளக்கு ஏற்றுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முதல்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று, இரண்டு கோவில்களிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி துவங்கியது. தொடர்ந்து, அஷ்டபந்தனம், விக்கிரகங்கள் நிலை நிறுத்தலும் நடக்கிறது. இன்று காலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் விழாவில் நான்காம் கால யாகவேள்வி துவங்குகிறது. காலை, 6:15 – 7:15 மணிக்குள் சக்தி விநாயகருக்கு மகா கும்பாபி ேஷகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு அபிேஷகம் நடக்கிறது. இதேபோல, 8:00 மணிக்கு மகாதீபாரதனையை தொடர்ந்து, 9:00 – 10:00 மணிக்குள் சவுடேஸ்வரி அம்மனுக்கு மகாகும்பாபி ேஷகம் நடக்கிறது. தொடர்ந்து பெண்களின் பால்குட ஊர்வலமும் தொடர்ந்து மகா அபிேஷகமும் அன்னதானமும் நடக்கிறது. மகா கும்பாபிேஷக ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.