பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், மூலவருக்கு தினசரி நடத்தப்படும் காலசந்தி சிறப்பு அபிஷேக நேரம், நேற்று முதல், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நேரம் மாற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மூலவர் முருகப் பெருமானுக்கு, காலை, 8:00 மணிக்கு காலசந்தி அபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் மற்றும் பூஜைகள் தினமும் நடந்து வருகிறது. கிருத்திகை, முக்கிய திருவிழா மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும், அதிகாலை, 5:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். மீதமுள்ள நாட்களில், ஒரு நாளைக்கு மூன்று நேரத்தில், மூலவருக்கு அபிஷேகங்கள் நடத்தப்படும்.
இந்நிலையில், நேற்று முதல், பிரதி செவ்வாய்க்கிழமை நாளில், காலை, 8:00 மணிக்கு நடக்கும் காலசந்தி அபிஷேகம், அதிகாலை, 5:00 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு காரணம், செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், காலை நேரத்தில் அதிகளவில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், காலசந்தி அபிஷேகம் ஒரு மணி நேரம் நடைபெறுவதால், (காலை, 8:00 மணி முதல், காலை, 9:00 மணி வரை) மூலவரை தரிசிக்க முடிவதில்லை. இதையடுத்து, வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் வேண்டுக்கோளை ஏற்று, செவ்வாய்க்கிழமை நாளில் மட்டும்,காலை, 8:00 மணிக்கு நடக்கவேண்டிய காலசந்தி அபிஷேகம், அதிகாலை, 5:00 மணிக்கு மாற்றப்பட்டது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.