பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ராமானுஜரின், 1,000வது அவதார திருநட்சத்திரத்தையொட்டி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் உள்ள, ராமானுஜர் உற்சவர் சிலை ஒவ்வொரு மாத நட்சத்திரத்தன்றும், நகரின் ஒவ்வொரு பகுதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, அவரின் அவதார திருநட்சத்திரமான திருவாதிரையான நேற்று பாபுநகர், சோழன் மேற்குதெரு, விவேகானந்தர் தெரு மக்களின் விருப்பத்துக்கு இணங்க, பாபுநகரின் மையத்தில் அலங்கார பந்தலில் எழுந்தருளினார். முன்னதாக, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, ராமானுஜரை சகல சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக பக்தர்கள் மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். அலங்கார பந்தலுக்கு வந்த ராமானுஜருக்கு, விசேஷ திருமஞ்சனம், அபி?ஷகம் முடிந்த பின் அவதார திருநட்சத்திரத்தையொட்டி, ராமானுஜர் நூற்றந்தாதி சேவை, ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு சவுராஷ்டிரா சின்மயா மகளிர் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். 6:00 மணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பக்தி பாடல்களுக்கு ஏற்ப கோலாட்டம் ஆடினர். இரவு, 8:00 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் தீப அலங்காரத்துடன், ராமானுஜர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தார்.