பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே 1ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2017 05:03
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே1ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இக்கோயிலில் 13 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.மீண்டும் திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.தற்போது பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை அமைக்கும் பணி நேற்று துவங்குவதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக மூலவர் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து சன்னதி முன்பாக முகூர்த்தக்கால் புண்ணியாகவாசனம் செய்யப்பட்டது. பின்னர் முகூர்த்தக்கால் கோயில் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு ராஜகோபுரத்தின் கிழக்குப் பகுதியில் யாகசாலை அமைக்கப்படும் பகுதிக்கு வந்தது. அங்கு ஈசான்ய மூலையில் முகூர்த்தக்கால் கொண்டு வரப்பட்டது.
கோவில் அறங்காவலர்கள் ஏஎல்.பெரியகருப்பன், என்.மாணிக்கவாசகன் தலைமையில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார்,சோமசுந்தரகுருக்கள் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. 101 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. பூஜையில் 200 சிவாச்சாரியர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேகம் மே1ல் காலை 9:00-10:00 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.