பதிவு செய்த நாள்
09
மார்
2017
04:03
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நாளை நடைபெற உள்ள மாசிமகத்திற்காக அழுக்கு படிந்த மகாமக குளத்தை சுத்தம் செய்யமால் அவரச கதியில் தண்ணீர் நிரம்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016ம் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக பெருவிழாவிற்காக பொதுப்பணித்துறை மகாமக குளத்தை சார்பில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பொற்றாமரை குளம் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காவிரி ஆறு மற்றும் அரசலாற்றில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் படித்துறைகளும் சீர் செய்யப்பட்டன. குறிப்பாக மகாமக குளத்தில் மகாமகத்தின் போது, பழைய கழிவுமண்ணை அகற்றிவிட்டு 1000 டாரஸ் லாரி மண் அரியலுார் மாவட்டம் காரைகுறிச்சி கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்டு குளத்தில் கொட்டப்பட்டு பக்தர்களின் வசதிக்காக 2 அடி மட்டும் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது. குளத்தில் மாசி மாதம் முழுவதும் பக்தர்கள் புனித நீராடினர். அதன்பின் மீண்டும் பழைய தண்ணீரை அகற்றிவிட்டு புதிய தண்ணீரை 8 அடிக்குமேல் நிறுத்தி இருந்தனர்.இதனால் பக்தர்கள் கரையில் நின்று நீராடி விட்டு சென்று வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து மகாமக குளத்தை பராமரிக்காமல் இருப்பதால் தண்ணீரில் பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.குளத்தில் உள்ள நீரை சுத்தமாக அகற்றாமல், பழைய நீரை அப்படியே வைத்து கொண்டு புதிய தண்ணீரை பாய்ச்சியதால் குளத்தில் அழுக்குகள் தேங்கி பாசிகள் படர்ந்தன. ஆனால் தற்போது நாளை(11ம் தேதி) இந்தாண்டு மாசிமக திருவிழா நடைபெறும் நிலையில், மீண்டும் குளத்தை எந்த சுத்தமும் செய்யமால் அவரசகதியில் தண்ணீர் நிரம்பட்டுள்ளன. இதனால்,குளத்தில் பாசிகள் படிந்தும்,இறந்தநிலைகளில் தவளைகள் மிதித்தும் காணப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது; மகாமக குளத்தில் முறையாக தண்ணீர் விடப்பட்டாலும் குறைந்த காலத்திற்கு மட்டுமே தண்ணீர் குளத்தில் நிற்கிறது. இதற்கு காரணம்,மகாமக குளத்தை சுற்றி உள்ள கடைகள்,ஒட்டல்கள் உள்ளிட்டவர்கள் அப்பகுதிகளில் போர்வெல் கொண்டு தண்ணீர் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், அருகில் உள்ள காசிவிஸ்வாநாதர் கோவில் பயன்பாட்டிற்காக மகாமக குளத்தில் விடப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது குளம் பாசி,அழுக்கு என மிதிந்து கிடக்கிறது இருப்பினும் மாசிமகத்திற்காக அவரச கதியில் கும்பகோணம் நகராட்சி,மாவட்ட நிர்வாகம் தண்ணீரை நிரம்பி வருகிறார்கள். நிச்சயம் தீர்த்தவாரியின் போது பக்தர்களுக்கு நோய்தாக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.