பதிவு செய்த நாள்
01
நவ
2011
11:11
பழநி : "அரோகரா கோஷத்துடன் பழநியில் சூரசம்ஹாரம் நடந்தது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று பழநியில் நடந்தது. மலைக்கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நவவீரர்கள் புடை சூழ, தங்கச்சப்பரத்தில் சுவாமி உட்பிரகார வலம் வந்து, அடிவாரம் பாத விநாயகர் கோயில் அருகே எழுந்தருளினார். திருஆவினன்குடி கோயிலுக்கு வேல் கொண்டு செல்லப்பட்டு, பூஜைக்குப் பின், பாத விநாயகர் கோயிலை அடைந்தது. பெரிய தங்க மயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி கத்தி, கேடயம், அம்பு, வில்லுடன் கிரிவீதியில் எழுந்தருளினார். வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கில் பானுகோபன், தெற்கில் சிங்கமுகாசூரன், மேற்கில் சூரபத்மன் வதம் செய்யப்பட்டனர். பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். சூரபத்ம வதம் முடிவில் சேவல் பறக்கவிடப்பட்டது. மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை, மலைக்கோயிலில் நடை சாத்தப்பட்டது. கோயில் இணை கமிஷனர் ராஜா, வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் வேலுமணி, சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு பங்கேற்றனர்.