பதிவு செய்த நாள்
15
மார்
2017
12:03
தான்தோன்றிமலை: தான்தோன்றிமலையில், ராமானுஜரின் புகழை பாடிக்கொண்டு, கோவிலையே சகோதரிகள் இருவர் நிர்வகித்து வருகின்றனர். கரூர் அடுத்த, தான்தோன்றிமலை வெங்கட்ரமண கோவில் பாதாள லட்சுமி, நரசிம்மர் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சன்னதியில், ராமானுஜர் உட்பட சுவாமிகள் புடைப்பு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை, இப்பகுதியை சேர்ந்த பெண்களே நிர்வகித்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாகிகளான ஓய்வுபெற்ற ஆசிரியை ஜோதி, அவரது தங்கை வரலட்சுமி ஆகியோர் கூறியதாவது: ஸ்ரீ பெரும்புதூரில் பிறந்து, சமூகத்தில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்திய ராமானுஜர், இறுதியில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி அடைந்தார். இவரின் பிறந்த நாள், வரும் மே, 1ல் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது. கடந்த காலத்தில், தென்மாநிலங்கள் முழுவதும் ராமானுஜர் ரதயாத்திரை வலம் வந்து போது, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கோவில் செல்லும் வழியில், ராமானுஜர் அமர்ந்து, லட்சுமி, நரசிம்மர், அங்கையற்கன்னி ஆகியோரின் தரிசனம் பெற்றார். ஆகையால், இந்த இடம் பாதாள லட்சுமி, நரசிம்மர் பெருமாள் கோவில் என்றழைக்கப்படுகிறது. நானும், என் தங்கையும் சேர்ந்து இந்த இடத்தை, 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, பக்தர்கள் ஒத்துழைப்புடன் கோவிலை நிர்வகித்து வருகிறோம். நன்கொடையாக எந்த நபரிடமும் பெற்றதில்லை. அவர்களாக முன்வந்து கோவிலுக்கு வேண்டிய தேவைகளை செய்கின்றனர். வாரந்தோறும் வியாழன் அன்று ராகு காலமான, 1:30 மணி முதல், 3:00 மணிக்குள் ஐந்து நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் பல்வேறு பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்துசெல்வர். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நடக்க இருப்பதால், விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.