நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பூப்பல்லக்கு நகர்வலத்துடன் நேற்று நிறைவடைந்தது. கடந்த பிப்., 27 ல் கொடியேற்றத்துடன் இவ்விழா துவங்கியது. மறுநாள் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கரந்தமலை கன்னிமார் தீத்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி விரதம் துவங்கினர். மார்ச் 14 அன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கினர். அன்று அதிகாலை முதலே விரதம் இருந்த பக்தர்கள் அம்மன் குளத்தில் இருந்து அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். பகலில் ஏராளமான இளைஞர்கள் கழுமரம் ஏறினர். பின், பலஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் நகர்வலம் புறப்பட்டார். அம்மன் குளத்தில் இருந்து மஞ்சள் நீராட்டுடன் புறப்பட்டு நகர்வலம் சென்ற அம்மன் நேற்று காலை கோயிலை அடைந்தார். இத்துடன் விழா நிறைவடைந்தது.