நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சுயம்புலிங்கமாக மலையின் கிழக்குத் திசையிலும், ஸ்தாபித லிங்கமாக மலையின் மேற்குத் திசையிலும் தம்மைத் தோற்றுவித்துக் கொண்டார்.
கிழக்குத் திசையில் அமைந்த சுயம்புலிங்கம் அருணாசலேஸ்வரர் என்ற பெயருடன் திருமாலால் பூஜிக்கப் பெற்றார். மலையின் மேற்குத் திசையில் அடி அண்ணாமலை திருத்தலத்தில் பிரம்ம தேவரால் ஸ்தாபிதம் செய்யப்பெற்று பூஜிக்கப் பெற்று ஆதி அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இதற்கான ஆதாரம் ஸ்கந்த புராணத்தில் உள்ளது.
ஒரு சமயம் பிரம்மதேவர் தன் சிருஷ்டியில் மிக்க அழகுள்ள திலோத்தமையை உருவாக்கிய பின் அவள் அழகில் தானே மோகங்கொண்டு அவள் பின் ஓட, திலோத்தமை பெண் புறாவாக மாறிப் பறக்க, பிரம்மதேவர் ஆண் புறாவாக மாறி பின் தொடர்ந்தார்.
திலோத்தமை அருணாசலம் வந்து அண்ணாமலையாரை வணங்கித் தன்னைக் காக்குமாறு வேண்ட, உடனே அண்ணாமலையார் வேடபுரீஸ்வரராக உருவெடுத்து, பிரம்மதேவரை எதிர்க்க, பிரம்மதேவர் அண்ணாமலையாரின் சீற்றத்தின் காரணத்தை உணர்ந்து, மோகம் தெளிந்தவராய் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியதுடன், இனியும் இதுபோல் தவறுகளைச் செய்யாதிருக்க அடி அண்ணாமலையில் ஆதி அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியை ஸ்தாபிதம் செய்து பூஜித்தார். இதுவரை 96 பிரம்மாக்கள் ஆதி அருணாசலேஸ்வரரை பூஜித்திருக்கிறார்கள்.