பதிவு செய்த நாள்
28
மார்
2017
01:03
பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பங்குனி மாத திருவிழா நடக்க உள்ளதால், தடையில்லா மின்சாரம் வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல் இருப்பதால், மின் தடை ஏற்படுவதில்லை. தற்போது, கடும் வெயிலால், மின் தேவை அதிகம் உள்ளது. அதனால், சில இடங்களில், ஓவர் லோடு காரண மாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தின், முதல் இரு வாரங்களில், திண்டுக்கல் மாவட்டம், பழநி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில்கள்; சென்னை, கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில், பங்குனி மாத திருவிழா நடக்கிறது. இதற்காக, தடையில்லா மின்சாரம் வழங்கும்படி, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும், தடையில்லாமல் தான் மின் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும், கோடை காலத்தில் வரும் பங்குனி திருவிழா, அதிக நாட்கள் நடக்கும். அதனால், கோவில்களைச் சுற்றியுள்ள இடங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். திருவிழாவில், மக்களும் திரளாக பங்கேற்பர். எனவே, திருவிழா நடக்கும் கோவில்கள், அதை சுற்றிய பகுதிகளுக்கு, மின்சாரம் தரும் துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில், பழுது ஏற்படாமல், தடையில்லாமல் மின்சாரம் சப்ளை செய்ய வேண்டும். மின் விபத்து ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை, செயற்பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -