பதிவு செய்த நாள்
29
மார்
2017
01:03
ஊத்துக்கோட்டை : அமாவாசை நாளையொட்டி, பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது எல்லம்பேட்டை கிராமம். இங்கு சாலையையொட்டி, அங்காளம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியாயி அம்மன் படுத்த நிலையில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். சாலையை ஒட்டி படுத்த நிலையில் உள்ள அம்மனை தரிசிக்க, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இங்கு, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு, அமாவாசை தினம் ஆனதால், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, அங்காளம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இரவு, வினாயகர், முருகர், பெரியபாளையத்தம்மன் உள்ளிட்ட கோவில்கள் வழியாக கரகம் மற்றும் கும்பசோறு எடுத்து வந்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபட்டனர். முன்னதாக உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை வழிபட்டனர். அதிகளவு பக்தர்கள் குவிந்ததால், ஊத்துக்கோட்டை ரோந்துப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.