பதிவு செய்த நாள்
31
மார்
2017
01:03
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு தொங்குட்டிபாளையத்தில், நூற்றாண்டு பழமையான, ஸ்ரீ பூமி நீளா ஸமேத சுயம்பு காரணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பழமை மாறாமல், புதிதாக முன் மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள், ஆகம விதிகளின்படி செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக, யாக சாலை பூஜைகள், தேரெழுந்தூர் ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார் தலைமையில், கடந்த, 27ம் தேதி துவங்கியது; தினமும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜை மற்றும் நிறைவேள்வி நடந்தது. தொடர்ந்து, யாத்ர தானம், தச தானம், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 9:30 மணிக்கு, மூலவர் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காரணங்களுக்கு எல்லாம் காரணமாக, சுயம்புவாக எழுந்தருளிய எம்பெருமானுக்கு, மகா கும்பாபி
ஷேகம் நடந்தது.
பக்தர்கள், ‘வெங்கட்ரமணா... கோவிந்தா’ என்று முழங்க, கோபுரங்களுக்கு, பட்டாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தச தரிசனம், திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், வேத பாராயணங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழு தலைவர் மணி, பொருளாளர் துரைசாமி, ஆலோசகர் செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.