பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
01:04
சென்னை: ராம நவமி மகோற்சவத்தை முன்னிட்டு, இன்று ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மகாவிஷ்ணு பகவானின் அவதாரமான ராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை, ராம நவமியாகும். அது சுக்ல பட்ச வளர்பிறையில், சித்திரை மாதம், ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. எனவே, அது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, ராம நவமி உற்சவம், இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்களில், 10 நாட்கள் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு கனகவல்லித் தாயார் ஸமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நங்கநல்லுாரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை நடந்து வருகிறது. ராமநவமியான இன்று, அதிகாலை விசுவரூபதரிசனம், கலசாபிஷேகம், யாகசாலையில் ஐந்து கால பூஜை நடத்தப்படுகிறது. வீடுகளில் ராமாயணம் படிக்கும் பெண்கள், இன்றுடன் நிறைவு செய்து, பூஜைநடத்தி பானகம், நீர் மோர் படைத்து, வினியோகிப்பது வழக்கம்.