பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
01:04
தாரமங்கலம்: முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தாரமங்கலம் அடுத்த, கோழிக்காட்டானூர் முத்துமாரியம்மன் திருவிழா, கடந்த மாதம், 23ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள், காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, தாரமங்கலம் வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். நாளை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அலகுகுத்துதல், மாவிளக்கு தட்டம் எடுத்தல் மற்றும் அக்னி கரகம் எடுக்கும் விழா நடக்கிறது.
* சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையில் உள்ள சிவியார் மாரியம்மன் கோவில் திருவிழா, மார்ச், 21ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று, ஏராளமான பக்தர்கள், அலகுகுத்தி, அக்னிச் சட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை, பொங்கல் விழா நடக்கிறது.