பதிவு செய்த நாள்
04
நவ
2011
10:11
ராசிபுரம்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் தேர்திருவிழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில், பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடந்த 31ம் தேதி இரவு, பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், நவம்பர் 1ம் தேதி பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், கொடியேற்று விழாவும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிடல், பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடந்தது.மேலும், அதிகாலையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கோவிலில் உருளுதண்டம் நிகழ்ச்சியும் நடந்தது. அன்று இரவு அக்கினி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை ஒரு மணி முதல் காலை 6மணி வரை 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்வாமி எழுந்தருளினார். முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ராஜவீதி வழியாக தேர்வலம் சென்றது. இன்று (நவ., 4) திருத்தேர் நிலைஅடைகிறது. இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை (நவ., 5) இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் ஸ்வாமி பவனி வரும் சத்தாபரணம், சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. நவம்பர் 7ம் தேதி முதல் 17 வரை விடையாத்தி கட்டளைதாரர் நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.